மாவட்டங்களுக்கு இடையே வழக்கமான பஸ் சேவைகளை இயக்கவேண்டும் - தொழிலாளர்கள் வேண்டுகோள்


மாவட்டங்களுக்கு இடையே வழக்கமான பஸ் சேவைகளை இயக்கவேண்டும் - தொழிலாளர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Sep 2020 8:15 PM GMT (Updated: 2020-09-02T02:08:33+05:30)

வெளி மாவட்டங்களுக்கு வழக்கமான பஸ் சேவையை அனுமதிக்கவேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்துக்குள் மட்டும் பொது போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் மாநகர எல்லைக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கூட மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரையில் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் வெளி மாவட்ட எல்லைகளிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தவிர்க்க வெளி மாவட்டங்களுக்கும் வழக்கமான பஸ் சேவையை அனுமதிக்கவேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “சென்னையில் பணிபுரிபவர்கள் ஏராளமானோர் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட எல்லைகளிலேயே வசித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு வருவதற்காக தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். தற்போது பஸ்கள் இயக்கப்படும் நடைமுறை மகிழ்ச்சி அளித்தாலும், அண்டை மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாதது வருத்தமளிக்கிறது. எனவே வழக்கம்போல வெளி மாவட்டங்களுக்கும் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என்றனர்.

Next Story