‘பஸ் கட்டணம் உயராது’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


‘பஸ் கட்டணம் உயராது’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2020 4:51 AM IST (Updated: 2 Sept 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வு என்ற தகவல் முற்றிலும் தவறானது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை,

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் பஸ்கள் கிருமிநாசினி திரவம் மூலம் சுத்தம்செய்யப்படும் பணியினை நேற்று பார்வையிட்டார்.

அப்போது போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கு.இளங்கோவன் ஆகியோர் உடன்இருந்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புறநகர் பஸ்களில் 32 பயணிகளுடனும், நகர பஸ்களில் 24 பயணிகளுடனும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்கவேண்டும். பயணிகள் தங்கள் கை களை சுத்தம் செய்திட பஸ்களில் கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டு இருக்கிறது.

அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு சொந்தமான 22 ஆயிரம் பஸ்களில், 6 ஆயிரத்து 90 பஸ்கள்(நேற்று பிற்பகல் 1 மணிவரை) இயக்கப்பட்டுள்ளன. பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள பஸ்நிறுத்தம் வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப முதல்-அமைச்சரின் உத்தரவுக்கிணங்க, அரசு பஸ்கள் இயக்கப்படும். அதிகாலை தொடங்கி இரவு 9 மணிவரை பஸ்கள் ஓடும்.

ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட பொருட்கள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண உயர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் முற்றிலும் தவறானது. தற்போது எந்தவிதமான கட்டண உயர்வு மின்றி நடைமுறையில் உள்ள கட்டண அடிப்படையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட ரூ.1,000 பயண அட்டையினை, செப்டம்பர் 15-ந்தேதி வரையில் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய மாதாந்திர பயண அட்டையினை நாளை (இன்று) முதல் விற்பனை நிலையங்களில் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கிராமப்புற பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. அந்தந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story