சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு: கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பால் கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது.
சென்னை,
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் பன்னாட்டு முனையத்தில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. முதலில் 25 விமான சேவைகளும், பின்னர் 30 விமான சேவைகள் வரையும் இயக்கப்பட்டன. எனினும் சென்னையில் இருந்து மும்பைக்கும், கொல்கத்தாவுக்கும் விமான சேவை தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. அதில் விமான சேவையை 50 ஆக உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கியது. இதனால் 3 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டன.
சென்னையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமானங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானங்கள் வர அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளுக்காக கொல்கத்தாவில் இருந்து தொழிலாளர்கள் வரவேண்டியது உள்ளதால் 5 விமானங்கள் சென்று, திரும்பி வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story