மாநகர பஸ்கள் வழக்கம் போல் ஓடின: பாதுகாப்பு நடவடிக்கைகளில் அசத்திய போக்குவரத்துத்துறை - பயணிகள் பாராட்டு


மாநகர பஸ்கள் வழக்கம் போல் ஓடின: பாதுகாப்பு நடவடிக்கைகளில் அசத்திய போக்குவரத்துத்துறை - பயணிகள் பாராட்டு
x
தினத்தந்தி 2 Sep 2020 2:05 AM GMT (Updated: 2 Sep 2020 2:05 AM GMT)

பாதுகாப்பு நடவடிக்கைகளில் போக்குவரத்துத்துறை அசத்தியதாக பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் மாவட்டத்துக்குள் மட்டும் மாநகர பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இதையொட்டி மாநகர பஸ்களில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. பஸ்சின் பின் பக்க வாசல் வழியாகவே பயணிகள் ஏறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். படிக்கட்டுகளில் ஏறி உள்ளே சென்றதும், கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பயணிகள் பஸ்சுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர். பஸ் டிரைவரும், கண்டக்டரும் முககவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர்.

அதேபோல முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே பஸ்சில் இருந்ததால் கண்டக்டர் அவர்களை தீவிரமாக கண்காணித்தார். பயணிகள் எச்சில் துப்பாதவாறும், ஜன்னல் கம்பிகளை தொடாதவாறும் பார்த்துக்கொண்டனர். பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும் பயணிகள் வரிசையில் நின்று சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு கண்டக்டர் கேட்டுக்கொண்டார். இப்படி ஒவ்வொரு பாதுகாப்பு அம்சங்களையும் மாநகர பஸ்களில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செய்திருந்தது. இந்த பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்கள் பாராட்டினர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும் மாநகர பஸ்களை எப்படி இயக்க போகிறார்களோ... என்று அச்சத்தில் இருந்தோம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அசத்தலாக செய்திருக்கிறார்கள் என்றனர்.

Next Story