அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எந்தெந்த ரெயில்கள் இயங்கும்? - தெற்கு ரெயில்வே அதிகாரி விளக்கம்


அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எந்தெந்த ரெயில்கள் இயங்கும்? - தெற்கு ரெயில்வே அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 2 Sep 2020 11:34 PM GMT (Updated: 2 Sep 2020 11:34 PM GMT)

தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

சென்னை,

ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொது மக்களின் வசதிக்காக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று திருச்சி- செங்கல்பட்டு (வழி விருதாச்சலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி- செங்கல்பட்டு (வழி மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, மயிலாடுதுறை-கோவை, திருச்சி-நாகர்கோவில் இடையே 7 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. மேலும் டெல்லி-சென்னை இடையே ராஜ்தானி சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, மீண்டும் ஊரடங்கு கடுமையாக் கப்பட்டு, சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி சிறப்பு ரெயில் சேவையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து சேவையும், பயணிகள் ரெயில் சேவையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இது குறித்து தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

7-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளோம்.

கோவை-காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி-செங்கல்பட்டு ஆகிய சிறப்பு ரெயில்களை சென்னை வரை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. தமிழகம் முழுவதும் விரைவு ரெயில்களை இயக்கவும், மின்சார ரெயில்களை இயக்கவும் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் தெற்கு ரெயில்வேக்கு வரவில்லை. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற விரைவு ரெயில்கள், பயணிகள் ரெயில்களை இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும். அதேபோல் மின்சார ரெயில்கள் இயக்குவது தொடர்பாக வருகிற 15-ந் தேதிக்கு பிறகு பரிசீலனை செய்து, முடிவு அறிவிக்கப்படும்.

டிக்கெட் கவுண்ட்டர்களில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. கவுண்ட்டர்களிலும், ஆன்லைனிலும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. இன்னும் ஓரிரு நாளில் டிக்கெட் முன்பதிவு குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story