ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு: கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன்


ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு: கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
x
தினத்தந்தி 3 Sept 2020 11:56 AM IST (Updated: 3 Sept 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான இளநீர் சங்கர், கடந்த 21-ந்தேதி அதிகாலை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இதில் நீதி விசாரணை கேட்டு அவரது உறவினர்கள் சங்கரின் உடலை வாங்க மறுத்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சங்கரின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று டி.ஜி.பி. திரிபாதி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சங்கரின் வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. அதில் வரும் 7ஆம் தேதி எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story