புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு - அரசாணை வெளியீடு


புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 3 Sep 2020 8:19 PM GMT (Updated: 2020-09-04T01:49:39+05:30)

புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் பல்வேறு கருத்துகள் இடம்பெற்று இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரையில் அதில் கூறப்பட்டு இருந்த மும்மொழி கொள்கை குறித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருமொழி கொள்கை தான் தொடர்ந்து பின்பற்றப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது புதிய தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகளை அரசுக்கு வழங்க உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

தரமான பல்கலைக்கழகங்கள், முழுமையான கல்வி, உகந்த கற்றல் சூழல்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவது, திறமையான ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வழங்குவது, உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆசிரியர் கல்வியை மறுசீரமைத்தல், உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவித்தல், உயர்கல்வியின் ஒழுங்குமுறையை மாற்றுவது போன்ற நோக்கில் புதிய தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது.

அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story