விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது


விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 4 Sept 2020 2:15 PM IST (Updated: 4 Sept 2020 2:15 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் 8-ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்துக்குள் பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில் முக்கிய பணிகள், அவசர தேவைகள் மற்றும் வியாபார நிமித்தம் போன்ற காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து வருகிற 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வெளி மாவட்டங்கள் இடையே பஸ்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

முன்பதிவு தொடங்கியது

இந்த நிலையில், விரைவுப் பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன் பதிவு தொடங்கியது.   முதற்கட்டமாக மதுரை, நாகர்கோவில், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. 

சாலை வரி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்கும் பட்சத்தில் மட்டுமே ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் பொதுப்போக்குவரத்தில் அரசு பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.தற்போது வெளியூர் செல்லும் அரசு பஸ்களில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை பல்லவன் இல்ல பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசு விரைவு பஸ்களில் என்ஜின் உள்ளிட்டவை சரியான நிலையில் இருக்கிறதா? என ஊழியர்கள் நேற்று தீவிரமாக பரிசோதித்தனர். இதுதவிர பஸ்களின் இருக்கைகள், பிரேக் உள்ளிட்ட கருவிகள் போன்றவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து பஸ்சின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் வெளியூர் செல்லும் பஸ்களின் இருக்கைகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கை எண்கள் மாற்றி அமைக்கப்பட்டன.கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

Next Story