சிதம்பரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி சாவு; 2 பேருக்கு தீவிர சிகிச்சை


சிதம்பரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி சாவு; 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 5 Sept 2020 4:30 AM IST (Updated: 5 Sept 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலியானார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது குருங்குடி கிராமம். இங்கு வாணவெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதில் குருங்குடியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதியின் பட்டாசு தொழிற்சாலையும் ஒன்று. இவரது தொழிற்சாலை நாரைக்கால் ஏரியோரம் உள்ள வயல்வெளியில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்த தொழிற்சாலை இயங்கவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியதால் இந்த பகுதியில் உள்ள சிறு, சிறு தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின. காந்திமதியும், தனது தொழிற்சாலையை இயக்க முடிவு செய்து அதுபற்றி தொழிலாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

காந்திமதியின் பட்டாசு தொழிற்சாலை நேற்று காலை திறக்கப்பட்டது. பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் 9 பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். காலை 10.45 மணி அளவில் வெடி தயாரிப்பதற்கான மருந்தை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி இடித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று வெடி மருந்து வெடித்துச் சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பொறிகள், அருகில் இருந்த வெடி மருந்துகள் மற்றும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வெடிகள் மீது விழுந்தது. இதனால் அவை ஒட்டுமொத்தமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடி மருந்தில் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

குண்டு வெடிப்பது போன்று சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அங்கு தொழிற்சாலை கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நாட்டு வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால், அருகில் செல்ல பொதுமக்கள் பயந்தனர். வெடிவிபத்தில் சிக்கிய பெண் தொழிலாளர்கள் மரண ஓலம் எழுப்பினர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும், காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் காந்திமதி (வயது 58), அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர்கொடி(65), காந்திமதியின் மகளும், நம்பியார் என்பவரின் மனைவியுமான லதா(40), உத்திராபதி என்பவரின் மனைவி சித்ரா(45), மாதவன் என்பவரின் மனைவி ராசாத்தி(48) ஆகிய 5 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி ருக்மணி(38), ரங்கநாதன் மனைவி என்பவரின் ரத்னாயாள்(60), காந்திமதியின் மருமகளும், முத்துவின் மனைவியுமான தேன்மொழி(35), நம்பியாரின் மகள் அனிதா(26) ஆகிய 4 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ருக்மணியும், ரத்னாயாள் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்மொழியும், அனிதாவும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த கோர விபத்து பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன், பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், “குருங்குடி கிராமத்தில் 7 பேர் அனுமதி பெற்று வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். காந்திமதி தற்போது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் விபத்து நேர்ந்து உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பலியான 7 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிர் இழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட கலெக்டருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story