தளர்வு இல்லா ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு: தமிழகத்தில் இன்று வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும்


தளர்வு இல்லா ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு: தமிழகத்தில் இன்று வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும்
x
தினத்தந்தி 6 Sept 2020 2:45 AM IST (Updated: 6 Sept 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

தளர்வு இல்லா ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 8-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என குறிப்பிட்டார்.

சென்னையில் ஏற்கனவே முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த ஜூலை மாதம் 5, 12, 19, 26-ந் தேதிகளிலும், ஆகஸ்டு 2, 9, 16, 23, 30-ந் தேதிகளிலும் என 11 முறை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தளர்வு இல்லாத ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல் வழக்கமான நடைமுறை அமலுக்கு வருகிறது. எனவே இன்று சென்னையில் அனைத்து வகையான கடைகளும் முழுமையாக திறக்கலாம். சாலைகளில் வழக்கம்போல வாகனங்கள் செல்லலாம்.

போக்குவரத்து போலீசாரின் கெடுபிடிகளும் இருக்காது. அதேவேளை மக்களும் சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story