2 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடற்ற ஞாயிற்றுக்கிழமை - காற்றில் பறந்த சமூக இடைவெளி


2 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடற்ற ஞாயிற்றுக்கிழமை - காற்றில் பறந்த சமூக இடைவெளி
x
தினத்தந்தி 7 Sept 2020 5:15 AM IST (Updated: 7 Sept 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களுக்கு பிறகு நேற்று கட்டுப்பாடற்ற ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை வீதிகளில் மக்கள் திரண்டனர். இதனால் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. இதன் காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்து உள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 8-வது கட்டமாக அமலில் இருந்து வருகிறது.

பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இடையிடையே சில தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, தலைநகர் சென்னையில் ஜூன் 21-ந் தேதி முதலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஜூலை 5-ந் தேதி முதலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதுவரை சென்னையில் 11 ஞாயிற்றுக்கிழமையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 9 ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து ஏற்கனவே தொடங்கிய நிலையில், இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இதேபோல், 13 சிறப்பு ரெயில்களும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தளர்வு இல்லாத முழு ஊரடங்கும் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் நேற்று கட்டுப்பாடுகள் இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.

கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள மீன் கடைகள், சிந்தாதிரிப்பேட்டை, வானகரம், காவாங்கரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது.

வழிபாட்டு தலங்களும் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ஒரு சில கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்பட பல முக்கிய தேவாலயங்கள் நேற்று திறக்கப்படவில்லை.

தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைவீதிகளில் மக்கள் திரண்டனர். நகரில் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளில் மதிய நேரத்தில் அதிக கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலும், வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிடும் எண்ணத்தில் நிறையபேர் கடைகளுக்கு வந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து பார்சல் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

இதேபோல், சென்னையில் உள்ள பல விளையாட்டு மைதானங்களில் நேற்று இளைஞர்களும், சிறுவர்களும் காலை முதலே கூட்டம் கூட்டமாக வந்து உற்சாகமாக விளையாடினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி காற்றுவாங்க நேற்று அதிகம் பேர் குடும்பம் குடும்பமாக வந்து மணல் பரப்பில் நடக்கத்தொடங்கினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பினார்கள்.

சென்னையைப் போல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. வார நாட்களை போல் சென்னையில் நேற்று மாநகர பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகம் இருந்தது. தளர்வற்ற ஊரடங்கு கடைபிடித்த ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் முக்கிய இடங்களிலும், பாலங்களிலும் போக்குவரத்து போலீசார் தடைகளை வைத்திருந்தார்கள். ஆனால் நேற்று அப்படி தடைகள் எதுவும் வைக்கப்படாததால் வாகனங்கள் சுதந்திரமாக சென்றன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு, முக கவசம் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மக்கள் அனைவரும் அதை முழுமையாக கடைப்பிடிப்பது இல்லை. இதனால், முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம் என்று அரசு அறிவித்து உள்ளது.

ஆனால் நேற்று யாரும் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அரசின் அறிவிப்பு காற்றில் பறந்ததைத்தான் காண முடிந்தது. கொரோனா பயம் இன்றி பல இடங்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கினார்கள். சமூக இடைவெளி என்பது எங்கும் கடைப்பிடிக்கப்படவில்லை. பலர் முக கவசமும் அணியாமல் சுற்றித் திரிந்தனர். அவர்களை தடுத்து அபராதம் விதிக்க எந்த அரசு அதிகாரியும் வரவில்லை.

ஏற்கனவே, கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய தளர்வுகள் மூலம் அது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் எழுந்து உள்ளது. எனவே, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துவதோடு, மக்களிடம் கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story