கிசான் திட்ட முறைகேடு : சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கிசான் திட்ட முறைகேடு : சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Sep 2020 9:44 AM GMT (Updated: 7 Sep 2020 9:44 AM GMT)

கிசான் திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின், விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காமல், முதலமைச்சர் பழனிசாமி போலவே ‘விவசாயி’ என்று சொல்லிக் கொள்ளும் போலிகளுக்கு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

முதலமைச்சர் திரு. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி, பிரதமரின் திட்டத்தில் 4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சேலத்தில் மட்டுமா ஊழல்? தமிழகம் முழுவதும் கொரோனா போலவே நீக்கமற நிறைந்திருக்கிறது அ.தி.மு.க. அரசின் ஊழல்!

கடலூர் மாவட்டத்தில், 'போலி விவசாயிகள்' கணக்கில் சூறையாடப்பட்ட பிரதமர் நிதியிலிருந்து 4 கோடியே 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.

வேளாண் துறையில் தங்களுக்குக் கைப்பாவையாக உள்ள அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலமாக இந்த மோசடிகளை அ.தி.மு.க. அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஊரடங்காலும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலாலும், போதிய அளவு பயிர்ப் பாதுகாப்பு இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து வாடி நிற்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமையாக இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மட்டுமல்ல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் மாபெரும் ஊழல் நடந்தது பற்றி சில வாரங்களுக்கு முன் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாயின.

'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற வகையில், திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி வட்டம் - தலையாமங்கலத்தில், ஏறத்தாழ 150 வீடுகள் கட்டப்பட்டதாகப் பொய்க் கணக்குக் காட்டி, பயனாளிகள் பெயரில், தலா ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் என்ற வகையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, 2018-ம் ஆண்டிலேயே இறந்துபோன ஜெயச்சந்திரன் என்பவர் பெயரில், 2019-ம் ஆண்டில் 4 தவணைகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், கட்டுமானப் பொருட்களுக்காக 55 ஆயிரம் ரூபாய் என்றும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

இறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது.

தங்கள் பெயரில் பண மோசடி நடந்திருப்பதை அறியாத அப்பாவி மக்கள் பலர், இன்னமும் ஒழுகும் குடிசைக்குள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும், ஆள்வோருடன் கூட்டுச் சேர்ந்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பா.ஜ..க. தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள். கோட்டை முதல், அமைச்சர்களின் பங்களாக்கள் வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும் தெரியவில்லை.

மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார்கள்; இவை போன்ற காரியங்களை மக்கள் ஒருபோதும் மறப்பதுமில்லை; மன்னிப்பதுமில்லை; நேரம் வரும்போது கடுமையாகத் தண்டித்து விடுவார்கள்.

'ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி' எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?

அ.தி.மு.க.,வின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கிறதா பா.ஜ.க.? என்கிற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது; அந்தக் கேள்வி, அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது.

பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story