ஐகோர்ட்டின் தீர்ப்பை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? - உரிமைக்குழு ஆலோசனை


ஐகோர்ட்டின் தீர்ப்பை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? - உரிமைக்குழு ஆலோசனை
x
தினத்தந்தி 8 Sept 2020 1:45 AM IST (Updated: 8 Sept 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபைக்குள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை தொடர்ந்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது பற்றி உரிமைக்குழு கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.

சென்னை, 

குட்காவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதியன்று நடந்த சட்டசபை கூட்டத்தில், தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்கள் குட்கா பாக்கெட்டுகளை சபாநாயகரிடம் தூக்கிக் காட்டி, பல கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக அரசை குற்றம் சாட்டினர்.

தடை செய்யப்பட்ட பொருளை சட்டசபைக்கு கொண்டு வந்திருப்பது தவறு என்று கூறி, அந்த சம்பவத்தை அவை உரிமைக் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் ப.தனபால் அனுப்பி வைத்தார். எனவே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் விசாரணைக்காக அவை உரிமைக்குழு 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

குட்கா விவகாரத்தில் உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு விளக்கம் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த நோட்டீசுக்கு ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி தீர்ப்பு வெளியானது. அதில், உரிமைக் குழுவின் 28-8-2017 தேதியிட்ட நோட்டீசின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி, வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை கோட்டையில் உள்ள குழு கூட்ட அறையில் துணை சபாநாயகரும், உரிமைக் குழுவின் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நேற்று உரிமைக் குழு கூடியது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் பிற்பகல் 1.45 மணிவரை நீடித்தது.

இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், எஸ்.குணசேகரன், ஆர்.குமரகுரு, விருகை வி.என்.ரவி, ராஜன் செல்லப்பா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆஸ்டின், எஸ்.ரகுபதி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.விஜயதரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, அடுத்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவை உரிமைக் குழுவில் உறுப்பினராக உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர், குட்கா தொடர்பான உரிமைக் குழுவின் விசாரணையில் ஏற்கனவே இருப்பவர்கள் என்பதால் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை.

உரிமைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.பெரியகருப்பன், யு.மதிவாணன் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.


Next Story