ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் பங்கு தரவேண்டும் - திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கடிதம்


ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் பங்கு தரவேண்டும் - திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கடிதம்
x
தினத்தந்தி 8 Sept 2020 12:29 PM IST (Updated: 8 Sept 2020 12:29 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் பங்கு தரவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கிடையில் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த சில திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றன. இதனை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, “சூரரைப் போற்று” திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியிடப்படும் என நடிகர் சூர்யா அறிவித்தார்.

பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாவதால் திரையரங்குகளின் வருமானம் பாதிக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து திரையரங்கு ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்ககள் திறக்கப்பட்டாலும் புதிய படங்களை வெளியிட வேண்டும் எனில் சில நிபந்தனைகளை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கு பல தயாரிப்பாளர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது;-

 “*  qube/ufo-க்கான vff கட்டணத்தை தயாரிப்பாளர்கள் இனி செலுத்த முடியாது.

* திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

* ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும்” என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில், “அரசாங்கத்தின் அனுமதியோடு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Next Story