கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்


கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
x
தினத்தந்தி 8 Sept 2020 1:52 PM IST (Updated: 8 Sept 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது சில தினங்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேர் விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி, பிரதமரின் திட்டத்தில் 4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் போலி விவசாயிகள் கணக்கில் பிரதமர் நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட 4 கோடியே 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார். மேலும் உண்மையான பயனாளர்களின் வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை என்றும் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விரிவாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story