சென்னை கலைவாணர் அரங்கில் 14-ந்தேதி முதல் சட்டசபை 3 நாட்கள் கூடுகிறது


சென்னை கலைவாணர் அரங்கில் 14-ந்தேதி முதல் சட்டசபை 3 நாட்கள் கூடுகிறது
x
தினத்தந்தி 9 Sept 2020 5:45 AM IST (Updated: 9 Sept 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் 14-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் அளித்த பேட்டி வருமாறு:-

14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூடும். 14-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான எச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவு மற்றும் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் மறைவு குறித்த இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

15-ந் தேதி பல்வேறு அரசினர் அலுவல்கள் நடைபெறும். 16-ந் தேதி 2020-2021-ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படும். துணை முதல்-அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட்டை படிப்பார்.

அதைத் தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான துணை பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும்.

பின்னர் துணை பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதமில்லாமல் நிறைவேற்றப்படும்.

மேலும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். சட்டசபையில் கேள்வி நேரம் உண்டு.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கட்டாயம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்களுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

6 மாதங்களுக்கு பிறகு சட்டசபை கூடுகிறது. ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், மதிப்பளிக்காமல், புதிய கல்வி கொள்கை மூலம் சனாதன கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியை திணிக்கிறது. இதில் அதிகம் பேச வேண்டியதுள்ளது.

எனவே சபையை குறைந்தது 7 நாட்களுக்காவது நடத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் 3 நாட்களுக்கு மட்டுமே நடத்துகின்றனர். ஏற்கனவே பல்வேறு அலுவல்கள் உள்ளன. கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதை அவர்கள் கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை கூடுவது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணைகளின்படி, 14-9-2020 அன்று சென்னை-2, கலைவாணர் அரங்கில் தொடங்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தில் சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு, சபாநாயகர் ப.தனபால் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவை கூட்டம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்குள்ளாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11-9-2020 அன்று முதல் ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரவை கூட்ட அரங்கில் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற ஊழியர்கள், பேரவை பாதுகாவலர்கள், கூட்ட அரங்கிற்கு வரும் அனைத்து துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நோயின்மை சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், உறுப்பினர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்திலும், ஏனையோருக்கு பேரவைச் செயலக வளாகத்திலும், கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் தவிர, இச்செயலகத்தால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே பேரவை கூட்டம் நடைபெறும் 3-வது தளத்தில் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story