8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2020 3:04 PM IST (Updated: 9 Sept 2020 3:11 PM IST)
t-max-icont-min-icon

8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில்,போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி - ஆ.ராசா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பேரிடர் காலத்திலும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு, மருத்துக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு, முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆகிய தீர்ப்புகளை திமுக வரவேற்றுள்ளது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் சமூக நீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது.தனிப் பெரும்பான்மை பலத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக, மத்திய அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்றும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் திமுகவை ஆட்சி பீடம் ஏற்றி, ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்திட தொண்டர்கள் சூளுரை ஏற்போம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

என்னை வளர்த்தவர் எம்ஜிஆர்- கருணாநிதி, என் தலைவர் கருணாநிதி- தான் இருப்பது திமுக. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர். இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும். நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர்.

9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்.

அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக் உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு.

மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி,. 3 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என கருணாநிதி குறிப்பிடுவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை.

அ.ராசா 5 முறை எம்.பி. பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்க கூடியவர்கள். கட்சியின் வளர்ச்சிக்கு தங்களது மொத்த திறமையும் பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story