அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாரா? உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம்


அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாரா? உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2020 4:43 PM IST (Updated: 9 Sept 2020 4:43 PM IST)
t-max-icont-min-icon

அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது.

இதனால் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையிலும், உள்மதிப்பீடு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் ‘அரியர்’(தேர்ச்சி பெறாமல் பாக்கி வைத்திருக்கும் பாடங்கள்) வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதை பரிசீலித்த தமிழக அரசு, கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் அந்ததேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதாவது அரியர் வைத்திருக்கும் பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தாலே அவர்கள் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். இதனால் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங் படிப்புகளில் அரியர் வைத்திருந்த ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், இந்த அறிவிப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியானது. அதில், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு தேர்வு நடத்தித்தான் பட்டம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வெளியான இந்த கடிதம் போலியானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அரியர் தேர்வில் விலக்கு பெற்று மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது.

இந்தநிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது. பல்கலைக்கழக மானியக்குழு உள்பட இதர அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த அரியர் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கவுரி தெரிவித்தார்.

இந்நிலையில், அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதுபோன்ற கடிதம் அனுப்பப்பட்ருந்தால் அதை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story