இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் வெளிமாவட்டங்களுக்கு மாற்றம்
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள்களை முறைகேடாக வழங்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தடையை மீறி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார் போன்றவற்றில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களையும் பறிமுதல் செய்து அந்தந்த போலீஸ் நிலைய பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போலீசார் உரிய ஆவணங்களை பெற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் சிலவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மார்த்தாண்டம் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 8 இருசக்கர வாகனங்களை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் முறைகேடாக வழங்கி இருப்பது தெரிய வந்தது. அதுதொடர்பான அறிக்கையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ஏட்டுகள் விக்டர், சுனில்ராஜ், போலீஸ்காரர் ரெனி ஆகிய 5 பேரையும் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட 5 போலீசாரையும் வெளிமாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்து மதுரை தென்மண்டல ஐ.ஜி. முருகன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சிவகங்கை மாவட்டத்துக்கும், ஏட்டு விக்டர் விருதுநகர் மாவட்டத்துக்கும், ஏட்டு சுனில்ராஜ் திண்டுக்கல் மாவட்டத்துக்கும், போலீஸ்காரர் ரெனி ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story