விளையாட்டு மைதானங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் - தமிழகம் முழுவதும் தமிழக அரசு வெளியிட்டது


விளையாட்டு மைதானங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் - தமிழகம் முழுவதும் தமிழக அரசு வெளியிட்டது
x
தினத்தந்தி 10 Sept 2020 3:30 AM IST (Updated: 10 Sept 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை உடற்பயிற்சி மற்றும் அனைத்து வகை விளையாட்டு பயிற்சிகளுக்காகவும் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இந்தநிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் விளையாட்டு மைதானங்களில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடும்படி அந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், அரசை கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது சோப்பு கரைசல் கை கழுவுவதற்காக வைக்கப்பட வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே உள்ளே ஒவ்வொருவரும் அனுப்பப்பட வேண்டும். மைதானத்தில் இருக்கும் வரையில் எப்போதுமே முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் துப்பக்கூடாது. மைதானத்தில் எத்தனை பேர் பயிற்சி எடுக்க வேண்டும் என்பது பற்றி விளையாட்டு அரங்க அலுவலரும், பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள்.

சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தொடக்கத்தில் 100 உறுப்பினர்களை மட்டும் அனுமதிக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரும் மைதானத்துக்கு வரக்கூடாது. அங்கு வருவோர் தங்களுக்கான குடிநீரை பாட்டிலில் கொண்டு வர வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மைதானம் பயன்படுத்தப்பட வேண்டும். பெரிய மைதானம் என்றால் குழுவாக பிரித்து, அவர்களுக்கு டோக்கன் அளித்து அதில் குறிப்பிட்ட நேரத்தில் மைதானத்துக்கு வரச் சொல்லலாம். மைதானத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். நொறுக்கு தீனி விற்பனை, துரித உணவு கடைகளுக்கு மைதான வளாகத்தில் அனுமதி கிடையாது.

மைதான பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை, ஷூக்கள் அணிந்திருக்க வேண்டும். நெறிமுறைகள் பற்றிய விளம்பரங்களை ஆங்காங்கு செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோயுடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மைதானங்களை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story