சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் 40 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை


சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் 40 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 11 Sept 2020 2:12 AM IST (Updated: 11 Sept 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான வக்கீல் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் முகமூடி அணிந்து வந்த 2 கொள்ளையர்கள், வக்கீல் வீட்டின் சுற்றுச்சுவரை எகிறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

மேலும் அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story