ஒரேநாளில் தமிழகத்தில் 202 இடங்களில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்


ஒரேநாளில் தமிழகத்தில் 202 இடங்களில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2020 2:50 AM IST (Updated: 11 Sept 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 202 இடங்களில் பரவலாக மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது.

அதிலும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 21 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இதோடு சேர்த்து தமிழகத்தில் 202 இடங்களில் நேற்று மழை பெய்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்த விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

தேவாலா 21 செ.மீ., நாமக்கல் 13 செ.மீ., பென்னாகரம், அகரம் சிகூர் தலா 8 செ.மீ., இறையூர், உளுந்தூர்பேட்டை, கலசப்பாக்கம், சேந்தமங்கலம், செய்யாறு, வால்பாறை தலா 7 செ.மீ., பூண்டி, சின்னக்கல்லாறு, வடபுதுப்பட்டி, சின்கோனா, தக்கலை, வேப்பந்தட்டை, தேன்கனிக்கோட்டை, குடியாத்தம் தலா 6 செ.மீ. உள்பட 202 இடங்களில் மழைபெய்து இருக்கிறது.

Next Story