சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவிக்கு ஆயுர்வேதா படித்தவரை நியமித்தது ஏன்? - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்


சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவிக்கு ஆயுர்வேதா படித்தவரை நியமித்தது ஏன்? - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 11 Sept 2020 7:28 AM IST (Updated: 11 Sept 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் பதவிக்கு ஆயுர்வேதா படித்தவரை நியமித்தது ஏன்? என்பது குறித்து ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்ததாக அறிவிப்பு வெளியிட்ட கோயம்பேட்டை சேர்ந்த தணிகாசலத்தை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இதை எதிர்த்து தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் போது சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு ஏன் நடத்துகிறது? சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவம் படித்தவர்கள் இருக்கும் போது, எதற்காக ஆயுர்வேதா மருத்துவம் படித்தவர் நியமிக்கப்பட்டார்? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், பணி மூப்பின் அடிப்படையிலேயே சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் பதவிக்கு ஆயுர்வேதா மருத்துவம் படித்தவரை நியமித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “இந்த அதிகாரியின் அதிகாரம் சித்தா மருத்துவ பிரிவுக்கு மட்டுமா? அல்லது ஆயுர்வேதா, யுனானி போன்ற மற்ற இந்திய மருத்துவ பிரிவுகளுக்கும் அடங்குமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது’ என்று எச்சரித்த நீதிபதிகள் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், இணை இயக்குனர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story