‘கோவிஷீல்ட்’மருந்து பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்


‘கோவிஷீல்ட்’மருந்து பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2020 3:19 PM IST (Updated: 11 Sept 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை, 

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவத்தால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரசை அழிக்க தேவையான மருந்துகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. முதல்கட்ட சோதனையில் வெற்றி அடைந்த இந்த மருந்தை பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள் மீது சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவிலும் ‘கோவிஷீல்ட்’ மருந்துக்கான பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில சுகாதாரத்துறை இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். தமிழகத்திலும் இந்த மருந்தை சோதனை செய்ய தன்னார்வலர்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்தது.

இந்தநிலையில், அமெரிக்காவில் மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து சோதனையில் சிலருக்கு பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்து சோதனையை நிறுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ‘கோவிஷீல்ட்’ பரிசோதனையில் ஈடுபட்ட நாடுகள் அனைத்தும் இந்த சோதனையை முற்றிலுமாக நிறுத்தின. தமிழகத்தில் இந்த சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்து பரிசோதனை காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மனிதர்கள் மீது செய்யப்பட்ட சோதனையில் 2-ம் கட்ட பரிசோதனை தற்போது அங்கு வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுவரை ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து பரிசோதனை தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story