சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது; 91 சதவீதம் பேர் பூரண குணம் அடைந்தனர்
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை 50 முதல் 59 வயதினரே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 சதவீதம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம், அண்ணாநகரில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், குறைந்தபட்சமாக மணலியில் 142 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதேபோல் குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 91 சதவீதமாக உள்ளது. மேலும் 2.01 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சென்னையில் 61.71 சதவீதம் ஆண்களும், 38.29 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 50 முதல் 59 வயதினரையே கொரோனா அதிகம் தாக்கியுள்ளது. அதாவது 18.33 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 30 முதல் 39 வயதினர் 17.91 சதவீதம் பேரும், 40 முதல் 49 வயதினர் 17.09 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் தலைநகரில் தணிந்து வருவதால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் வெகுவாக குறைந்துள்ளன. நேற்று வரை சென்னையில் 11 பகுதிகளுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதில் மாதவரத்தில் 7 பகுதிகளுக்கும், அண்ணாநகரில் 2 பகுதிகளுக்கும், வளசரவாக்கம், சோழிங்கநல்லூரில் தலா ஒரு பகுதிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story