தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 4:20 PM IST (Updated: 12 Sept 2020 4:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மெற்றில்டா மகன் செல்வன் குரூஸ் காட்வின் என்பவர் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் சிறுவன் குபேரன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் மகள் தர்ஷினி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். உதகை வட்டம், சோலூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் சோபனா அவருடைய வீட்டில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், செங்கழநீர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன்கள் ஜெய்பிரசாந்த் மற்றும் குணால் ஆகிய சிறுவர்கள் இருவரும் குளத்து நீரில் மூழ்குவதை அறிந்த ஷீலா அவர்களை காப்பாற்ற முற்பட்ட போது, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், துண்டல்கழனி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, சத்யா, பூர்ணிமா மற்றும் கலையரசி ஆகிய நான்கு நபர்கள் ஏரியில் துணி துவைக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் முருகேசன் கிணறு வெட்டும் போது மண் சரிந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைநாடார் மகன் தேவராஜ் அம்சி குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1  லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story