குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா? விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பு


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா? விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Sept 2020 4:15 AM IST (Updated: 13 Sept 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா? என்று விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா? என்று விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெறும். 10-ம் நாள் இரவில் கோவில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசிப்பார்கள்.

தசரா விழாவை முன்னிட்டு, பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்தும், ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தும் கோவிலில் வழங்குவார்கள்.


இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அப்படியே திருவிழா நடந்தாலும் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

இருந்தபோதும், திருவிழா நடக்கும் என நம்பிக்கையில் பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள் தற்போது விரதம் தொடங்கி உள்ளனர். ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் துளசிமாலை அணிவிக்கவில்லை. எனவே, கோவிலுக்கு முன்பாக பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசிமாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கி உள்ளனர். அங்கு அவர்கள் தினமும் ஒருவேளை பச்சரிசி உணவு உண்டு, அம்மன் புகழ்பாடி வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உடன்குடி அருகே மாதவன்குறிச்சி ஈசுவரி தசரா குழு நிர்வாகி கருப்பசாமி கூறியதாவது:-

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் எங்களது ஊரில் பக்தர்கள் விரதம் தொடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தசரா திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும்நிலை ஏற்பட்டால், உள்ளூரில் உள்ள கோவிலிலேயே காப்பு கட்டி, வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி குலசேகரன்பட்டினம் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “இந்த ஆண்டும் கோவிலில் தசரா திருவிழா நடைபெறும். எனினும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதை அரசுதான் முடிவு செய்யும். திருவிழாவை எப்படி நடத்த வேண்டும்? என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுதொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வழிகாட்டுதல் கிடைக்கப்பெறும். அதன்படி தசரா திருவிழா நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story