கல்லூரி மாறுதல் விதிகள் கடுமையாக இருப்பதால் இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுஆய்வு செய்யவேண்டும்- ஐகோர்ட்டு கருத்து


கல்லூரி மாறுதல் விதிகள் கடுமையாக இருப்பதால் இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுஆய்வு செய்யவேண்டும்- ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 13 Sept 2020 5:00 AM IST (Updated: 13 Sept 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் கல்லூரி இடமாறுதல் தொடர்பான விதிகள் கடுமையாக இருப்பதால், அந்த விதிகளை இந்திய பல் மருத்துவ கல்வி கவுன்சில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவ கல்லூரியில் படித்த லட்சுமி என்ற மாணவி, வேறு ஒரு தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு இடமாறுதலுக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை இந்திய பல் மருத்துவ கவுன்சில் நிராகரித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்தார். மாணவியை கல்லூரியில் சேர்க்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய பல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, “பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, 2-ம் ஆண்டு பல் மருத்துவ படிப்பின்போது மட்டுமே ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற முடியும். இந்த மாணவி கடந்த ஆண்டு 3-ம் ஆண்டு படிக்கும்போது, இடமாறுதலுக்கு ஒப்புதல் கேட்டார். அதனால் அவரது கோரிக்கையை கவுன்சில் நிராகரித்தது” என்று வாதிட்டார்.

மேலும், “இதுபோன்று இடமாறுதல் பெறுவது என்பது மாணவர்களின் உரிமையாக கோர முடியாது. கல்வி கட்டணம் செலுத்துபவர் மரணமடைதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே இடமாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்” என்று அவர் வாதிட்டார்.

மாணவி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஓம்.பிரகாஷ் “வேறு வழியே இல்லாமல் தான் மாணவி வேறு ஒரு கல்லூரிக்கு இடமாறும் முடிவை எடுத்துள்ளார்.

கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு முதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிக கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ததாக மாணவியின் தந்தைபோலீசில் புகார் செய்துள்ளார்.3 வழக்குகளையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “பல் மருத்துவ கவுன்சில் விதிகளின் படி 2-ம் ஆண்டு படிக்கும்போது மட்டுமே வேறு கல்லூரிக்கு இடமாறுதல் செய்ய முடியும். எனவே, இந்த மாணவி, 2-ம் ஆண்டு படிப்பில் சேர விரும்பினால், அவ்வாறு அவரை 2-ம் ஆண்டு படிப்பில் சேர்த்துக் கொள்ள தனியார் கல்லூரி சம்மதித்தால், இதற்கு அனுமதி கேட்டு மாணவி மீண்டும் மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவை 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை இந்திய பல் மருத்துவ கவுன்சில் பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


மேலும், “கல்லூரி இடமாறுதல் தொடர்பாக பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் கடுமையாக உள்ளது. இந்த வழக்கில் மாணவி வேறு ஒரு கல்லூரிக்கு இடமாறுதல் கேட்பதற்கான காரணத்தை விளக்கமாக கூறி அவர் சார்பில் வாதிடப்பட்டது. எனவே, இந்த விதிகளை இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.


Next Story