‘முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் போட்டி போட்டு நடிக்கிறார்கள்’-மு.க.ஸ்டாலின் பேச்சு
கொரோனாவில் மக்களை அல்லாட விட்டு விட்டு முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளருமான குழந்தை தமிழரசன் உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். கொரோனாவில் மக்களை அல்லாட விட்டுவிட்டு மாவட்டம் மாவட்டமாக கட்சிக்காரர்களை சந்தித்து வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இன்றைக்கு ‘நீட்’ அரக்கன், ஒவ்வொரு உயிராக பறித்து கொண்டிருக்கிறது. மதுரையில் ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி, ‘நீட்’ பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனும் அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, விழுப்புரம் மோனிஷா, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டை ஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் என ‘நீட்’ தேர்வால் பலியான மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ‘நீட்’ தேர்வுக்கு விலக்களித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வாங்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசிடம் கூனி குறுகி நிற்கிறார். ‘நீட்’ தேர்வு நடக்கப்போகிறது. நாடே எதிர்க்கிறது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, அதனை எதிர்க்க தைரியம் இல்லாமல் முதுகெலும்பை தொலைத்து விட்டு நிற்கிறார்.
‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அவர், அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை கூட செயல்படுத்த முடியாமல் தவித்து நிற்கிறார். ஆகவே இந்த ஆட்சி மாணவ-மாணவிகளுக்கு விரோதமான ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராக காத்திருக்கிறார்கள்.
என்றைக்கு தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் தங்கள் தொகுதிக்குள் ஓட்டு கேட்டு கூடப் போக முடியாது. அந்த அளவிற்கு மக்களை துயரத்தில், பேரிடரில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இந்த பொல்லாத ஆட்சியை தூக்கியெறிந்து விட்டு தி.மு.க. ஆட்சியை அரியணையில் ஏற்ற கருணாநிதியின் நினைவிடத்தில் அந்த வெற்றியை காணிக்கையாக்க நாமெல்லாம் ஒருங்கிணைவோம். வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story