பிரதமரின் கிசான் திட்ட மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, கே.எஸ்.அழகிரி


பிரதமரின் கிசான் திட்ட மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 13 Sept 2020 4:45 AM IST (Updated: 13 Sept 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் கிசான் திட்ட மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு, கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான். இத்திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூ.110 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடியைப் போல தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்படுகின்ற தொகுப்பு வீட்டிலும் மெகா மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெற முடியுமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்காமல், சி.பி.ஐ. விசாரிப்பதே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும். சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story