சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்பு; சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது


சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்பு; சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 Sept 2020 5:13 AM IST (Updated: 13 Sept 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

சிவில் சர்வீசஸ் போட்டித்தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறது.

சென்னை,

இந்தியாவிலேயே முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் போட்டித்தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு தேர்வாக வேண்டும் என்று விரும்புகிற மாணவர்களுக்கு, பெருகி வரும் போட்டிகள் இந்நாளில் பெரும் தடையாக உள்ளன. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் சாதிகளை கடந்து, மத பாகுபாடுகளை கடந்து, மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், உயரிய சேவை நோக்கோடு பல்வேறு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவசப்பயிற்சி மையம் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

மனிதநேய பயிற்சி மையம் அளிக்கும் தங்குமிட வசதிகளுடன் படிக்கும் மாணவ-மாணவிகளை தவிர, பிறர் மனிதநேய மையத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ள தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டிற்கு ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாவதாக மாணவர்களும், பெற்றோரும் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் முறையிட்டனர்.

இதற்கு மாற்றாக புதிய வகையில் பயிற்சி முறையை மாற்றியமைக்க எனது மையம் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மனஉளைச்சலை தராத வகையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 4 ஆண்டுகளாக மைய இயக்குனர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து தமிழகத்தின் அனைத்துதரப்பு மாணவ-மாணவிகளும் பயன்பெறும் விதமாக, இந்திய அளவில் முதல் முறையாக தொலைக்காட்சி மூலமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெற்றோருக்கு ஒரு ரூபாய் செலவும் இல்லாமல், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற விரும்பும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் முன்னிலையில் தொலைக் காட்சி மூலமாகவே முழுமையான அடிப்படை பயிற்சி வகுப்புகளை கவனித்து கற்று தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் அந்த வசதி அனைத்துப்பகுதி மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இணையதள வசதியற்ற, இணையதளம் பெற வழியற்ற மாணவர்கள், குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளாக இல்லாமல் அனைவரும் காணக்கூடிய தொலைக்காட்சி மூலமாக தினமும் ஒரு மணி நேரம் மத்திய அரசு பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளோம்.

இந்த நேரடி வகுப்புகள், பல்வேறு பாடங்களில் சிறந்த புலமை பெற்ற பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் புலமை பெற்றவர்கள் மூலமாக நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுத விரும்பும் மாணவ-மாணவிகள், பணியில் இருப்போர், பள்ளி மாணவர்கள், சுயதொழில் செய்வோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும், தொடர்களையும் பார்ப்பது போல் தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்புகளை ஏதேனும் ஒருநாள் தவறவிடும் மாணவர்கள் அதற்கான தொடர்புக் குறியீட்டின் (லிங்க்) மூலம், தவறவிட்ட வகுப்புகளை பார்த்து பயன்பெறலாம். அதேபோல், தேவைப்படும் நேரத்திலும் திரும்பவும் அதை கேட்க முடியும். பயிற்சி வகுப்புகளில் தினமும் கலந்து கொள்ளும் மாணவர்கள் அடையாளம் காணப்படுவர்.

தகுதி, திறமை, ஆர்வம் மற்றும் தொடர் வகுப்புகளில் கலந்து கொள்ளும் தன்மை ஆகியவையும் ஓராண்டுக்கு பிறகு சென்னையில் நடத்தப்படும் நேரடி பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நேர்முகத்தேர்வு மூலம் சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு தேர்வாகும் தகுதியும், திறமையும் உள்ள மாணவ-மாணவியருக்கு இலவச உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் தேர்வுகளுக்கு உரிய வகையில் திறன் மேம்பாட்டுடன் கூடிய இறுதி பயிற்சியும் அளிக்கப்படும்.

மத்திய அரசு பணிகளுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வாக விரும்பும் சாமானிய மாணவ-மாணவிகளுக்கு பொருளாதாரம் எந்தவிதத்திலும் ஒரு பெருந்தடையாக இருந்து விடக்கூடாது என்பதே இப்பயிற்சி முறையின் நோக்கமும், எனது நோக்கமும் ஆகும். இது மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏதேனும் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் ஒளிபரப்பாகும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் விவரங்களுடன் வெளியிடப்படும்.

இப்பயிற்சி பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழுவிவரங்களை எங்களது இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு அதற்கான அடையாள எண்களை பெற வேண்டும். இது அவர்களுக்கான அடுத்தக்கட்ட பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும். முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எளிதில் வெற்றிக்கொள்ளும் வகையில் இப்பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காலநேரத்தை மிச்சப்படுத்தி, படிப்பில் கவனம் செலுத்தலாம். தேவையற்ற வகையில் சென்னையில் வந்து பயில வேண்டும் என்கிற கட்டாயம் இதன்மூலம் தவிர்க்கப்படும்.

பேரிடர் காலத்திலும் அல்லது வேறுவிதமான இடையூறுகள் காரணமாக, பயிற்சி மற்றும் கல்வியில் தடைகள் ஏற்படாத வண்ணம் இக்காலத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story