15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு - 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி


15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு - 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 Sept 2020 6:19 AM IST (Updated: 13 Sept 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு தாள்-1-க்கான முடிவு நேற்று வெளியானது. இதில் 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

சென்னை, 

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 முறையும், தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்ததாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டு, இறுதியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஜனவரி மாத ஜே.இ.இ. முதன்மை தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதன்மை தேர்வு கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில், 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

2 முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வை மொத்தமாக 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்த ஆண்டு எழுதிஇருந்தனர். இவர்களில் முதன்மை தேர்வு தாள்-1-க்கான(பி.இ., பி.டெக்.) முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது.

இதில் 24 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேசிய தேர்வு முகமையின் தேர்ச்சியை பெற்று இருக்கின்றனர். அவற்றில் தெலுங்கானாவை சேர்ந்த 8 மாணவர்கள், டெல்லியை சேர்ந்த 5 மாணவர்கள், ராஜஸ்தானை சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் ஒருவர்கூட இதில் இடம்பெறவில்லை.

அதேபோல், மாநிலவாரியாக அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றவர்களில் மாணவர்கள் வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த கவுரவ் கோச்சரும், மாணவிகள் வரிசையில் எஸ்.நிருபமாவும் இடம்பெற்று இருக்கின்றனர். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-2-க்கான (பி.ஆர்க்., பி.பிளானிங்) தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-1-ல் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், கட்-ஆப் மதிப்பெண்ணும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவ-மாணவிகள் அடுத்தகட்டமாக நடைபெறும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அந்த தேர்வு வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அந்த தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.

Next Story