வள்ளியூர் அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்
வள்ளியூர் அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துராமன் (வயது 34). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் தி.மு.க. கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் தற்போது வள்ளியூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் முத்துராமன் தன்னுடைய நண்பரை தெற்கு வள்ளியூருக்கு காரில் அழைத்து சென்று விட்டார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் திரும்பி வந்தபோது, தெற்கு வள்ளியூர் ரேஷன் கடை அருகில் சாலையில் மண்எண்ணெய் பேரல்களை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனே காரில் இருந்து கீழே இறங்கிய முத்துராமன் மண்எண்ணெய் பேரல்களை அகற்றியபோது, அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள் முத்துராமனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் மற்றொரு முத்துராமன் (30). விவசாயியான இவரும் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவருக்கும், கொலையான முத்துராமனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கொடை விழாவில் பேனர் வைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் ஒரே கட்சியில் இருந்ததாலும், கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாக அவ்வப்போது கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராமன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, காரில் வந்த முத்துராமனை வழிமறித்து தீர்த்துக்கட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக முத்துராமன் மற்றும் அவருடைய நண்பர்களான அன்பழகன் மகன் ராம்கி என்ற ராம்குமார் (28), அவருடைய தம்பி தில்லை (25), இசக்கியப்பன் மகன் குலசேகரபெருமாள் என்ற குணா (21) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story