சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டசபை மாற்று இடமான கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எச்.வசந்தகுமார் எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டசபை மாற்று இடமான கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எச்.வசந்தகுமார் எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கோட்டையில் உள்ள கூட்ட அரங்கத்தில் சட்டசபை கூட்டப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்படி அங்கு போதிய இடவசதி இல்லை என்பதால், சட்டசபை கூடும் இடம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
அங்கு 3-வது தளத்தில், கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கு போலவே அம்சங்களை மாற்றாமல் கூட்ட அரங்கை அமைத்திருந்தனர். ஏராளமான ஒளி விளக்குகள், சுழலும் மின்விசிறிகள் நிறுவப்பட்டு இருந்தன. கோட்டையில் உள்ள கூட்ட அரங்கில் வைக்கப்படிருந்த தலைவர்களின் படங்கள், டிஜிட்டல் கடிகாரங்கள் போன்றவை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டசபையிலும் வைக்கப்பட்டு இருந்தன.
கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் இருந்த சபாநாயகர் நாற்காலி, கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சருக்கு தனியாக 5 அடி நீள மேஜை, ஒரு இருக்கை, ஒரு மைக் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர்களுக்கு நீண்ட மேஜை போடப்பட்டு 3 அடி இடைவெளியில் தனித்தனி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இந்த இடைவெளி விடப்பட்டு இருந்ததால், வழக்கமாக முன்வரிசையில் இருந்த அமைச்சர்கள் ஒரு சிலருக்கு பின்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது.
எம்.எல்.ஏ.க்கள் அமரும் இடத்திலும் ஒவ்வொரு மேஜையிலும் 3 அடி தூரம் இடைவெளி விடப்பட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு தனி இருக்கை அளிக்கப்பட்டு இருந்தது. தனி இருக்கைகள் அனைத்தும் சாம்பல் வண்ண குஷன் சேராக இருந்தன. மேஜைகளில் வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. கூட்ட அரங்கத்தின் தரைப்பகுதியில் பச்சை விரிப்புகள் போடப்பட்டு இருந்தன.
குறைந்த குளிரில் ஏசியும், மின்விசிறிகளும் இயக்கப்பட்டன. இதனால் கூட்ட அரங்கத்துக்குள் மென்மையான சீதோஷ்ண நிலை நிலவியது. கூட்ட அரங்கின் கூரைப்பகுதியில் 4 அடி இடைவெளியில் சுழலும் மின்விசிறிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 9.15 மணிக்கே எம்.எல்.ஏ.க்கள் வரத் தொடங்கினர். கொரோனா சோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு பச்சை வண்ண அடையாள அட்டை தரப்பட்டு இருந்தது. அதை அணிந்தபடி எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
9.30 மணிக்கு அமைச்சர்கள் வரத் தொடங்கினர். சபாநாயகர் ப.தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட அனைவருமே பச்சை அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். சட்டசபைக்குள் வரும் யாரும் கருப்பு நிற முககவசம் அணிய அனுமதிக்கப்படவில்லை.
கூட்ட அரங்குக்கு வெளியே 3 இடங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கான வருகைப் பதிவேடு வைக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் 9.54 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 9.55 மணிக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9.56 மணிக்கும் வந்தனர். முதல்-அமைச்சர் வரும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். மேஜையில் துணி விரிப்பு இருந்ததால், தட்டும் ஒலியின் அளவு குறைவாகவே இருந்தது.
சபாநாயகர் ப.தனபால் 10 மணிக்கு தனது இருக்கைக்கு வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் திருக்குறளை வாசித்து பொருள் விளக்கம் அளித்தார். பின்னர் இரங்கல் குறிப்பையும், இரங்கல் தீர்மானத்தையும் அவர் வாசித்தார். என்-95 முககவசம் அணிந்தபடி அவர் பேசியதால், ஒலிபெருக்கிகளில் குரல் சரிவர கேட்கவில்லை.
மாற்று இடத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 23 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., எச்.வசந்தகுமார் எம்.பி., கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்றைய கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார். சரியாக 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடந்தது. அதாவது, காலை 10.16 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story