கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டேங்க் பழுது பார்க்கும் பணியின்போது தீ விபத்து -2 பேர் படுகாயம்


கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டேங்க் பழுது பார்க்கும் பணியின்போது தீ விபத்து -2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sept 2020 5:45 AM IST (Updated: 15 Sept 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, பாண்டிபஜார் கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டேங்க் பழுது பார்க்கும் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை, 

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையத்தில், பழுதான பழைய பெட்ரோல் சேமிப்பு ‘டேங்கை’ மாற்றும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பணியில் திருவான்மியூரை சேர்ந்த குமார் (வயது 45), ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தசேகர்(36) உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டு வந்தனர்.

பழுதான பெட்ரோல் சேமிப்பு டேங்கில் சிறிது பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழுது நீக்குவதில் இறுதிகட்ட பணியாக நேற்று பெட்ரோல் சேமிப்பு டேங்கில், குழாய்களை ‘வெல்டிங்’ செய்யும் பணியில் குமார் மற்றும் சேகர் ஈடுபடுபட்டனர். அப்போது, வெளியான தீப்பொறி, அங்கிருந்த பெட்ரோல் மீது விழுந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது. மேலும் மளமளவென பரவிய தீ, டேங்கின் உட்புறம் முழுவதும் வேகமாக பற்றி எரிந்தது.

இதில் குமார் மற்றும் சேகருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட சக ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அதிநவீன மீட்பு வாகனத்தில் விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை ரசாயன பொடி கொண்டு அணைத்தனர். தீக்காயம் அடைந்த சேகர் மற்றும் குமாரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் பாண்டிபஜார் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story