கோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்


கோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
x
தினத்தந்தி 14 Sep 2020 11:00 PM GMT (Updated: 14 Sep 2020 9:02 PM GMT)

கோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்-வக்கீல்கள் அளித்தனர்

மதுரை, 

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் நேற்று காலை வக்கீல்கள் நீலமேகம், முகமதுரபீக், குமார், பிரியா, துஜா ஆகியோருடன் வந்து மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்காவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக கோர்ட்டுகளையும், நீதிபதிகளையும் அவமரியாதை செய்யும் வண்ணமும், சட்டத்தின் ஆட்சியினை கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு நடிகர், நடிகைகளிடையே விஷச்செடியாக வளர்ந்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் வரம்பு மீறியும், எல்லை மீறியும் தேச இறையாண்மைக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் பொய்யான போலியான கருத்து திணிப்புகளை புகுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

நாடு முழுவதும் நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றார்கள். அந்த தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவில் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு நீட் தேர்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக நடிகர் சூர்யா பேட்டி கொடுத்திருந்தார். அதில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த கருத்து கோர்ட்டின் கண்ணியத்தையும், அரசியல் அமைப்புச்சட்டத்தினை அவமரியாதை செய்யும் வகையில் இருந்தது. எனவே நீதியின் மாண்பை சீர்லைக்கும் வண்ணமும் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வண்ணமும் பேசி வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story