மாநில செய்திகள்

வேலூரில் இருந்து நளினி, முருகனை புழல் சிறைக்கு மாற்ற முடியாதது ஏன்? ஐகோர்ட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. விளக்கம் + "||" + Why can't Nalini and Murugan be transferred from Vellore to Pulhal jail? Prison DGP in iCourt Description

வேலூரில் இருந்து நளினி, முருகனை புழல் சிறைக்கு மாற்ற முடியாதது ஏன்? ஐகோர்ட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. விளக்கம்

வேலூரில் இருந்து நளினி, முருகனை புழல் சிறைக்கு மாற்ற முடியாதது ஏன்? ஐகோர்ட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. விளக்கம்
வேலூர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு நளினியையும், முருகனையும் ஏன் மாற்ற முடியாது? என்பதற்கு விளக்கம் அளித்து தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நளினியை, சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் பத்மா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சுனில்குமார்சிங் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்க தற்போது அனுமதி வழங்குவது இல்லை. அதற்கு பதில் உறவினர்களுடன், செல்போன் வாயிலாக ‘வீடியோ கால்’ பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரர் பத்மாவும் இவ்வாறு நளினியுடன் பேச அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், நளினி தன்னையும், தன் கணவரையும் புழல் சிறைக்கு மாற்றக்கோரி மனு கொடுத்தார். அதில், வயதான தன் தாயார் சென்னையில் வசிப்பதாகவும், தங்கள் வழக்கில் தீர்ப்பு அளித்த சிறப்பு கோர்ட்டுபூந்தமல்லியில் உள்ளதாகவும் காரணம் கூறியிருந்தார். புழல் சிறையில் 30 கைதிகளுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டதால், 10 நாட்களுக்கு ஒரு முறை 30 நிமிடம் என்ற ரீதியில் உறவினர்கள், நண்பர்கள், வக்கீல்கள் ஆகியோருடன் கைதிகள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வாய்ப்பு நளினிக்கு மறுக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி கூட அவர் வக்கீலுடன் பேசினார். ஆனால், பிற கைதிகள் தங்களது வக்கீல்களுடன் “வாட்ஸ்ஆப் வீடியோ கால்” வாயிலாக பேச அனுமதிக்கப்படுவதாக, நளினிக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். அவ்வாறு யாருக்கும் வீடியோ கால் வாயிலாக பேச அனுமதி வழங்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் அற்பமான காரணங்களுக்காக சக கைதிகளுடன் சண்டை போடுவது, சிறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் நளினி ஈடுபடுவார். மேலும், தன்னுடன் தன் கணவர் முருகனையும், புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். நளினியை சிறை மாற்றினால், முருகனையும் புழல் சிறைக்கு மாற்றவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதே, முன்விரோதம் உள்ளது.

இவர்கள் ஒன்றாக சிறையில் அடைக்கப்பட்டால், பாதுகாப்பில் பிரச்சினை வரும் என்று ஏற்கனவே உளவுத்துறை அறிக்கை வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நிலவும் காலத்தில் கைதிகளை சிறை மாற்றமுடியாது. சிறை அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்ல, சக கைதிகளை ஒழுங்கீனமாகவும், சிறை விதிகளுக்கு கீழ்படியாமலும் செயல்பட நளினி ஊக்குவிப்பார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, நளினியை சிறை மாற்ற மறுத்து கடந்த ஜூலை 21-ந் தேதி உத்தரவிடப்பட்டது. எனவே, இவர்களை புழல் சிறைக்கு மாற்ற முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் பெயர் உள்ளதா?- டி.ஜி.பி.க்கு. ஐகோர்ட்டு கேள்வி
செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், தொழிலதிபர்கள் பெயர்கள் உள்ளதா? என்று தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு கருத்து
நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.