நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சனையாக யார் காரணம்...? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
நீட் தேர்வை கொண்டு வந்து 13 பேரின் மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
சென்னை
நீட் தேர்வை கொண்டு வந்து 13 பேரின் மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
மேலும் நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜரானாரா? இல்லையா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் 2010ம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரித்ததாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க இருந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி அதனை தடுத்துவிட்டதாக கூறினார்.
அப்போது திமுக குறித்து இன்பதுரை கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடினாரா ? இல்லையா? என ஸ்டாலினை நோக்கி கேள்வியெழுப்பினார்.
நளினி சிதம்பரம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கமிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்து 13 பேரின் மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும் நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்று நாட்டுக்கே தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ராமசாமி, சட்டப்பேரவையில் இல்லாத நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதாகவும், இதை எதிர்த்து கேட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
Related Tags :
Next Story