புளியந்தோப்பில் மின்கசிவால் பெண் பலி: 2 மின்வாரிய என்ஜினீயர்கள் தற்காலிக பணி நீக்கம்


புளியந்தோப்பில் மின்கசிவால் பெண் பலி: 2 மின்வாரிய என்ஜினீயர்கள் தற்காலிக பணி நீக்கம்
x
தினத்தந்தி 16 Sept 2020 5:30 AM IST (Updated: 16 Sept 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் மின்கசிவால் பெண் உயிரிழந்த விவகாரத்தில், மின்வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

சென்னை புளியந்தோப்பு, பெரியார் நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் அலிமா (வயது 45). திருமணமான இவர், கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு கிளம்பிய அவர், தெருவில் நடந்து சென்றபோது நிலத்தடியில் பதிக்கப்பட்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின்சார வயர் மீது மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 பொறியாளர்கள்

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அலிமா என்ற பெண் மின்கசிவால் உயிரிழந்த விவகாரத்தில், அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அந்த பகுதியின் பெருநகர சென்னை மாநகராட்சி மின்துறை உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன், இளநிலைப் பொறியாளர் வெங்கடராமன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story