அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2020 9:24 PM GMT (Updated: 15 Sep 2020 9:24 PM GMT)

பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்குரிய இழப்பீடு தொகை கடந்த 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை நில உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அதேநேரம் அந்த நிலத்தை அதன் உரிமையாளர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நிலத்தில் வீடுகள் கட்டுவதற்கு வீட்டு வசதி வாரிய டெண்டர் கோரப்பட்டது.

அந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற பொதுமக்களிடம் கருத்து கேட்டு பொது அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னரே நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிர்ணயித்தது உள்பட நிலம் கையகப்படுத்தப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. சட்டப்படி இழப்பீடு நிர்ணயித்து வழங்கவில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அவசரகதியில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், திட்டத்தை 1999-ம் ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்தி வருவதாகவும், ஆனால் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும், அதனால் உண்மை நிலவரத்தை தெரிவிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், ஆவணங்கள் மாயமானது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று நிலம் கையகப்படுத்தும் பணிகள் காலாவதியாகிவிட்டதால், அந்த நடைமுறைகளை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

மேலும், ‘தமிழக அரசு பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். எனவே காணாமல் போன ஆவணங்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மாயமான ஆவணங்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். தவறு செய்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கையும், வெளிநபர் என்றால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்காது.

எங்கோ பத்திரமாக இந்த கருப்பு ஆடுகள் பதுக்கி வைத்திருக்கும். இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த நபர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதுடன், எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களை தைரியமாக செய்து, பொதுநலன் திட்டங்களை சீர்குலைப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story