நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு வழக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு வழக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sept 2020 3:40 AM IST (Updated: 16 Sept 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவும், பகலும் போராடி வருகின்றனர். இந்தநிலையில், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் கடந்த ஏப்ரல் 8 மற்றும் 20-ந்தேதிகளில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கட்டுப்படுத்த முடியாத அளவு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரை கொரோனா சிகிச்சை பணிக்காக நியமிக்க கூடாது என்று கூறியிருந்தார்.

ஆனால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில், 50 வயதுக்கு மேற்பட்ட டாக்டர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர் கள், கர்ப்பிணிகள், அண்மையில் குழந்தை பெற்ற பெண் டாக்டர்கள் ஆகியோர் கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்தப்படுகின்றனர்.

ஏற்கனவே டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதார பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுற்றறிக்கைகளின்படி நீரிழிவு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகளை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். தடையும் விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கசிவம் ஆஜராகி, “50 வயதுக்கு மேற்பட்ட, நீரிழிவு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் உள்ளிட்டோரை கொரோனா சிகிச்சை பணிக்கு அமர்த்துவதால் அவர்கள் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் உள்ளிட்டோர் வருகிற 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story