எங்களுக்கு இனமும் மொழியும், நாடும் மக்களும் முக்கியம் ‘இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர இந்தி மொழியை அல்ல’ தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி மு.க.ஸ்டாலின் காணொலி பேச்சு


எங்களுக்கு இனமும் மொழியும், நாடும் மக்களும் முக்கியம் ‘இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர இந்தி மொழியை அல்ல’ தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி மு.க.ஸ்டாலின் காணொலி பேச்சு
x
தினத்தந்தி 18 Sept 2020 4:30 AM IST (Updated: 18 Sept 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு இனமும் மொழியும், நாடும் மக்களும் முக்கியம் என்றும் இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழாவையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் உரிமைக்காக, தமிழ் மக்களின் உணர்வாய் உருவான இயக்கம் தான் நமது தி.மு.க. இதே செப்டம்பர் 17-ந்தேதி, 71 ஆண்டுகளுக்கு முன்னால் கொட்டும் மழையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கருணாநிதி உள்ளிட்ட தனது தம்பிமார்களுடன் இந்த மாபெரும் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா தொடங்கினார்.

இந்த 70 ஆண்டுகால நமது நெடும்பயணத்தில் சீர்திருத்தம், சமதர்மம், சமூகநீதி, இன உரிமை, மொழி உணர்வு, தமிழக உரிமைகள் ஆகியவற்றில் நாம் எப்போதும், எந்நாளும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்தது இல்லை. ஆட்சியில் இல்லாத போது இக்கொள்கைகளுக்காக போராடினோம்; ஆட்சியில் இருக்கும் போது இக்கொள்கைகளை அமல்படுத்தி, திட்டமிட்டு செயல்பட்டோம். அதனால் தான் ஒரு முறையல்ல; 5 முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை நமக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

நமது கொள்கைகள் தெளிவானவை. நமது நோக்கங்கள் வெளிப்படையானவை. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் நம்மை பற்றிய அவதூறுகளைக் கிளப்புவார்கள். இதை இன்று நேற்றல்ல; நாம் கட்சி தொடங்கிய காலம் முதல் பார்த்துதான் வருகிறோம்.

நம்மை, மத உணர்வுகளை புண்படுத்துபவர்கள் என்கிறார்கள். இல்லை. நாம் மத அடிப்படைவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர மதங்களுக்கு அல்ல. நாம் மொழி வெறியர்கள் என்கிறார்கள். இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல.

எங்களுக்கு இனமும் மொழியும் நாடும் மக்களும் முக்கியம். அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இந்த நான்குக்கும் உண்மையாக இருக்கிறோம் என்பதை நம் வரலாறு சொல்லும். நான் பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை சிறுவயதிலேயே அறிந்தவன். அவரது உரையைக் கேட்டேன். அவரை அருகில் இருந்து பார்த்தேன்.

இவர்கள் நம்முள் விதைத்ததே இன உணர்வு, மொழி உணர்வு, மாநில சுயாட்சிக் கொள்கை, சமூகநீதித் தத்துவம். இவற்றை வென்றெடுக்க எத்தனையோ தியாகங்களை நம் இயக்கத்தினர் செய்துள்ளார்கள்.

தொண்டர்களே, நீங்கள் தான் அன்றும் இன்றும் தி.மு.க.வை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பல்வேறு பேரிடர்களில் முன்நின்று மக்கள் பணி செய்துள்ளீர்கள். இதோ, இன்றோ ஒரு கொடிய பேரிடருடன் உலகமே போராடிகொண்டிருக்கும் வேளையில் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நீங்கள் ஆற்றி வரும் மக்கள் பணிக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். நீங்கள் அனைவரும் சேர்ந்தது தான் இயக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story