சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

சசிகலா சிறையில் இருந்து வருவதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் மாறுமா?. உங்கள் கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என்று சொல்லியுள்ளாரே?

பதில்:- தி.மு.க. கூட்டணியில் இருந்து பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எங்கள் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வேறு கூட்டணிக்கு போகாது. தேர்தல் காலத்தில் இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேருகின்ற வாய்ப்பு இருக்கும். தேய்பிறை போல தி.மு.க. தேய்ந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வின் ஆட்சி வளர்பிறை போன்று வளர்ந்துகொண்டு வருகிறது. வளர்பிறையை நோக்கி தான் வருவார்களே தவிர, தேய்பிறையை நோக்கி செல்லமாட்டார்கள்.

கேள்வி:- சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். இதனால் கட்சியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்:- அவர் எப்போது விடுதலை ஆவார் என்பது சட்டத்துக்குத்தான் தெரியும். அவர் வெளியில் வந்தாலும், வராவிட்டாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே நாங்கள் எடுத்த அதே நிலைதான் தொடரும்.

கேள்வி:- கிசான் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வைகோ கோரிக்கை வைத்துள்ளாரே?

பதில்:- சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதம் எழுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட வேளாண்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை கொடுக்கப்படும். பாரபட்சம் இல்லாமல் யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு.

கேள்வி:- பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க. வருகிறது என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அதிகாரபூர்வ கருத்தாக பா.ஜ.க.வின் மத்தியில் இருந்து வருபவர்கள், அவர்களின் சார்பில் மாநிலத் தலைவர் ஆகியோரின் கருத்துகளைதான் எடுத்துக்கொள்ளவேண்டும். நேற்று ஒரு கட்சியில் இருந்துவிட்டு, இன்று பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டு சொல்பவர்களின் கருத்தை கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story