வண்டலூர், பல்லாவரத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


வண்டலூர், பல்லாவரத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Sept 2020 5:30 AM IST (Updated: 18 Sept 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர், பல்லாவரத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வண்டலூர்-கேளம்பாக்கம்-மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் ரூ.80 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, இளையனார் குப்பத்தில் பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக ரூ.23 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி உயர்மட்டப்பாலம் மற்றும் புதுப்பட்டினம் புறவழிச்சாலை, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டுவில், விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்துவைத்தார்.

மேலும், வேப்பூர் வட்டம், காட்டுமயிலூரில் காட்டுமயிலூர்-கொங்கராம்பாளையம் சாலையில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயம்-ஓடைப்பட்டி சாலையில் ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.165 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், புறவழிச்சாலை, பாலங்கள், உயர்மட்டப்பாலம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும், சென்னை மாவட்டம், ராஜீவ்காந்தி சாலையில், டைடல் பார்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ.108 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 யூ வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ரூ.21.96 கோடி செலவில் நடைபெற்று வரும் கொரட்டூர் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதையின் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த மாதத்திற்குள் இந்த பணி முழுவதும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கொளத்தூர் மேம்பாலப்பணியில் இடதுபுற பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ரூ.41 கோடி செலவில் நடைபெற்று கொண்டிருக்கின்ற வலதுபுற பாலப்பணிகள் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதத்திற்குள் (அக்டோபர்) முழு பணிகளும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.93.50 கோடி செலவில் நடைபெற்று கொண்டிருக்கிறது, இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழு பாலப்பணிகளும் நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.146.41 கோடி செலவில் மேடவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

வேளச்சேரி முதல் தாம்பரம் செல்லும் இடதுபுற பாலப்பணிகள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கீழ்கட்டளை மேம்பாலப்பணி ரூ.64 கோடி செலவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 82 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் பாலப்பகுதி வருகிற நவம்பர் மாதத்தில் முடிவடையும். இடது புறப்பகுதியானது 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

திருவொற்றியூர்-பொன்னேரி பஞ்சட்டி சாலை உயர்மட்டப் பாலம் ரூ.58.64 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிப்பதற்கு அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி மேம்பாலமும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ரூ.19.75 கோடி செலவில் தாம்பரம் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. ரெயில்வே பகுதி பணிகளை விரைந்து முடிக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குரோம்பேட்டை, ராதா நகர் வரையறுக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் ரூ.28.99 கோடி செலவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

ரூ.206 கோடி செலவில் பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இப்படி சென்னை மாநகரம், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னைக்குள்ளும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இந்த அரசு பல்வேறு பாலங்களை கட்டி கொடுத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பா.பென்ஜமின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அ.ஜான் லூயிஸ், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என். சாந்தி, தலைமை பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே. செல்வன், தலைமைப்பொறியாளர் (பெருநகரம்) ச.சுமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா, வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story