திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை


திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை
x
தினத்தந்தி 18 Sept 2020 4:37 PM IST (Updated: 18 Sept 2020 4:37 PM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமித்து, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மாயமான ஆவணங்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்களில், 23 வழக்குகளின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட காவல் துறையினரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 வழக்குகளின் ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் கடமையை செய்யக்கூடிய திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை என்பதால், காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை கண்டறிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Next Story