ஜெயலலிதாவின் வீடு தொடர்பானஜெ.தீபா, ஜெ.தீபக் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதாவின் வீடு தொடர்பானஜெ.தீபா, ஜெ.தீபக் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Sept 2020 2:30 AM IST (Updated: 19 Sept 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

தீபக், தீபா தனித்தனியே தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க மறுத்து, டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரைத்தது குறித்து, நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை,

ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் ஒரு அறக்கட்டளை தொடங்கவும், அவர்களுக்கு அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 8 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குடன், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் சாவியை கேட்டு ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கும், வேதா நிலையத்தை கையகப்படுத்தி, அதற்கான இழப்பீட்டு தொகையை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் செலுத்தியதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிவிசன் பெஞ்ச் உத்தரவின்படி தீபா, தீபக் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், இதுகுறித்து அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் தீபக், தீபா தனித்தனியே தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க மறுத்து, டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரைத்தது குறித்து, நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இந்த இரு வழக்குகளையும் தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். டிவிசன் பெஞ்ச் விசாரிக்க முடியாது என்று கூறி, இந்த 2 வழக்குகளையும் மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக கூறி உத்தரவிட்டனர்.

மேலும், அறக்கட்டளையை தீபா, தீபக் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட வழக்கை மட்டும் தாங்கள் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். பின்னர் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Next Story