ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு வருகிற 21-ந் தேதி தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு


ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு வருகிற 21-ந் தேதி தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு
x
தினத்தந்தி 19 Sept 2020 4:30 AM IST (Updated: 19 Sept 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வருகிற 21-ந் தேதி இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைய வாய்ப்புள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., கடந்த 1983-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி என்.டி.ராமாராவுடன் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.ஆந்திராவில் 152 கிலோ மீட்டரிலும், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கும் கால்வாய் உள்ளது. இந்த திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறந்துவிட வேண் டும்.

அதன்படி 1996-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது

கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை ஒரே தவணையில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

இந்த நிலையில், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீரை தமிழகத்துக்கு திறந்து விட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதையொட்டி திருப்பதியில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்திலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர அரசு அனுமதி அளிப்பதில் தாமதமானது. இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த திறப்பு நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஹென்றி மரியம் ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் ஷண்முக சுந்தரம், உதவி பொறியாளர்கள் சதீஷ், பழனிக்குமார் மற்றும் ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போது கண்டலேறு அணையில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைய வாய்ப்பு உள்ளது. மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தால் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 16.60 அடியாக பதிவானது. 59 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story