பா.ஜனதா கூட்டத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் 10 பேர் தீக்காயம்


பா.ஜனதா கூட்டத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் 10 பேர் தீக்காயம்
x
தினத்தந்தி 19 Sept 2020 4:56 AM IST (Updated: 19 Sept 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கூட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பா.ஜ.க. பிரமுகர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பாடி திருவலிதாயம் சிவன் கோவில் முன்பு நேற்று மாலை பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாட தயாராக இருந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. வினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது வானில் பறக்க விடுவதற்காக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான பலூன்களை தயாராக வைத்து இருந்தனர். அந்த பலூன்களை பிடிக்க அப்பகுதி சிறுவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

இந்த விழாவில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் கலந்து கொண்டார். அவரை மாலை அணிவித்து வரவேற்றனர். இதற்காக அங்கு சரவெடி வெடிக்கப்பட்டது. பட்டாசில் இருந்து சிதறிய நெருப்பு துகள்கள், அங்கு பறக்கவிட வைத்து இருந்த பலூன்கள் மீது விழுந்தது.

இதில் பலூன்களில் இருந்த ஹீலியம் வாயு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து வந்த பெரும் நெருப்பு பிழம்பு அங்கிருந்த பா.ஜனதா கூட்டத்தினர் மீது விழுந்தது. இந்த தீ விபத்தில் விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன், பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

அனைவரும் உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story