வேளாண் சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி


வேளாண் சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 Sept 2020 6:55 PM IST (Updated: 19 Sept 2020 6:55 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி விவசாய உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி செய்தல்) சட்டம், விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்) விலை ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் இந்த சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதள கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி கூட்டணிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களுக்கு அதிமுக ஆதரவளித்தது குறித்து தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. முதலமைச்சர் தன்னை இனி விவசாயி என சொல்லிக் கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், “தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் அதிமுக அரசு அதை எதிர்க்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

மேலும் இந்த சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை என்று கூறியுள்ள அவர் மக்களவையில் நிறைவேறி உள்ள சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story