அ.தி.மு.க. அரசின் கபட வேடமும், நாடகமும் அதிக காலம் நீடிக்காது - மு.க.ஸ்டாலின் தாக்கு


அ.தி.மு.க. அரசின் கபட வேடமும், நாடகமும் அதிக காலம் நீடிக்காது - மு.க.ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 20 Sept 2020 4:54 AM IST (Updated: 20 Sept 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வஞ்சிக்கும் அ.தி.மு.க. அரசின் கபட வேடமும், நாடகமும் அதிக காலம் நீடிக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க. மீது, இத்தனை வன்மத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே... நீட் தேர்வு நடப்பதற்கும் மாணவ மணிகளின் உயிர்ப்பலிகளுக்கும் தி.மு.க. மீது பழி போடுகிறாரே... அதற்கு தி.மு.க. எந்தப்பதிலும் சொல்லவில்லையே என்று தொண்டர்களும், தி.மு.க. ஆதரவாளர்களும், ஏன், பொதுமக்களுமே கூட நினைக்கக்கூடிய கட்டாயத்தைத் திட்டமிட்டுத் திணிக்கிறது அ.தி.மு.க. அரசு.

ஊழல் செய்வதற்காகவே சில திட்டங்களை உருவாக்கி, டெண்டர்களை விடுவதில் மட்டும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள், தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் தப்பிக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வு ஏற்படுத்தும் அச்சத்தால், மாணவ மணிகளின் உயிர் பறிபோவது பற்றிக் கேட்டால், தி.மு.க. தான் காரணம் என்கிறார், முதல்-அமைச்சர். தி.மு.க. ஆட்சியிலா நீட் தேர்வு நடந்தது என்று கேட்டால், பதில் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்கான சட்ட ஒப்புதலை ஜனாதிபதியிடம் பெற்றது தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு.

நீட் தேர்வை நுழைய செய்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். எல்லாவற்றையும் மறைத்து விட்டு, சட்டமன்ற பாதுகாப்பை பயன்படுத்தி, தி.மு.க. மீது பழிபோட்டுத் தப்பிக்கலாம் எனச் சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகியவை இந்திய விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என ஒட்டுமொத்த நாட்டிலும் உள்ள விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. இதனைப் பாராட்டி ஆதரிக்கிறது.

அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வஞ்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து, ஜனநாயக ரீதியாக பேரவையில் பேசுவதற்கோ ஆரோக்கியமான விவாதத்திற்கோ இடமளிக்கப்படுவதில்லை. ஜனநாயக மாண்புகளுக்கு இடமளிக்காமல், எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்காமல், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், ஆள் இல்லாத இடத்தில் கம்பு சுழற்றி, செயற்கையான வீராவேசம் காட்டி, ஊடக வெளிச்சம் தேடிக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட நினைக்கும் அ.தி.மு.க. அரசின் கபடவேடமும், கண்மூடித்தனமான நாடகமும், அதிக காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும்... 6 மாதத்தில் விடியும்...! சட்டமன்ற நாடகத்திற்கு மக்கள் மன்றம் திரைபோடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story